×

கடம்பா உபரிநீர் வடிகால் ஓடை பகுதியில் உப்பள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி

*கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு

ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுவதற்கான இடத்தை ஆய்வுசெய்த தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், கடம்பா உபரிநீர் வடிகால் ஓடையில் தலைவன்வடலி பாலத்தில் இருந்து உபரிநீர் கடலில் சங்கமிக்கும் இடம் வரை காணப்படும் உப்பள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணிகளையும்
ஆய்வுசெய்தார்.

தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், திருச்செந்தூர், ஆறுமுகநேரி பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நேற்று முன்தினம் மதியம் ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு வருகை தந்த கலெக்டர், பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே பழைய குப்பை கிடங்கு குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில் உள்ள அந்த இடத்தை சுத்தப்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு பேரூராட்சி தலைவரிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து ஆறுமுகநேரி கடலோர காவல் நிலையம் எதிரே ஒன்றிய அரசின் உப்பு இலாகா இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து ஆறுமுகநேரி பேரூராட்சிப் பகுதியில் புதிய விளையாட்டு மைதானம், பயிற்சி அரங்கம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கடம்பா உபரி நீர் வடிகால் ஓடையானது தலைவன் வடலி பாலத்தின் வழியாக கடலில் சங்கமிக்கும் இடம் வரை காணப்படும் உப்பள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நடந்துவரும் தூர்வாரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்த கலெக்டர், ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது திருச்செந்தூர் ஆர்டிஓ குருச்சந்திரன், பொதுப்பணித்துறை தாமிரபரணி கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், திருச்செந்தூர் தாசில்தார் வாமணன், ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன், ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன், விவசாய சங்கத்தலைவர் செல்வம், ஆத்தூர் திமுக செயலாளர் முருகானந்தம், மார்க்சிஸ்ட் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post கடம்பா உபரிநீர் வடிகால் ஓடை பகுதியில் உப்பள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி appeared first on Dinakaran.

Tags : Kadamba Sewage ,Senthilraj ,Arumuganeri ,Thoothukudi ,Kadamba ,Dinakaran ,
× RELATED மூதாட்டி தீக்குளித்து சாவு